திருவாரூர்: உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் சர்வதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு கடந்த மார்ச் 2ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுப்பிரமணிய சுவாமி உற்சவம், சந்திரசேகரசுவாமி கேடக உற்சவம், இந்திர விமான உற்சவம் மற்றும் வெள்ளி யானை வாகன உலா உள்ளிட்டவைகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இத்தேரினை மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இக்கோயிலுக்குச் சொந்தமான ஆழித் தேரானது ஆசியாவிலேயே மிக பிரமாண்டத் தேராக கருதப்படுகிறது. ஹைட்ராலிக் பிரேக்குடன் 96 அடி உயரமும் 400 டன் எடையும் கொண்டது இதன் தனிச் சிறப்பாகும்.
கடந்த ஆண்டு கரோனா அச்சத்தால் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட ஆழித்தேரோட்டம், தற்போது அரசு அனுமதியுடன் வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு நான்கு முக்கிய வீதிகளின் வழியாகச் சுற்றிவந்து இறுதியில் தேரடி வீதியில் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
இத்தேரோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின்பேரில் ஐநூறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.