திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாததால், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வராமல் நேரடியாக நாகை- வேளாங்கண்ணி நெடுஞ்சாலைகளில் பயணிகளை இறக்கிவிட்டு அப்படியே சென்றுவிடுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல கட்டணமாக கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாலும், ஆட்டோக்களில் செல்ல 50 ரூபாய் வரை செலவு ஏற்படுவதாலும், பயணிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பழைய பேருந்து நிலையத்திற்கு நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் சங்கு ஊதி கண்டன ஆர்ப்பாட்டம்!