திருவாரூர் மாவட்டம் நன்னிலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது கோடை சாகுபடியான குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கிலிருந்து விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கரோனா தாக்கத்தின் காரணமாக நடவுப் பணிக்காக வேலைக்கு ஆள்கள் யாரும் வருவதில்லை.
வீடு வீடாகச் சென்று ஆள்களை கூட்டி வருவது சிரமமாக உள்ளது. குறுவை சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளியில் சென்று உரம் வாங்குவதற்கு காவல்துறையினர் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கின்றனர்.
நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களிலும் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நிலையைக் கவனத்தில் கொண்டு உரங்கள் தட்டுப்பாடின்றி எளிய வகையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மரத்திலேயே வெடித்து அழுகும் பண்ருட்டி பலா: மனம் வெதும்பி அழும் கடலூர் விவசாயிகள்!