ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படுவதால் வன்முறைகள், விபத்துக்கள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையைத் திறக்கக் கூடாது என கோஷங்களை எழுப்பினர். ஆண்கள் மது குடிப்பதற்காக வீட்டில் உள்ள பெண்களிடம் சண்டையிடுவதாகக் கூறி, மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சரிவர அமல்படுத்தப்படாததால், ஊரடங்கு முடியும் வரை மது விற்பனைக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்