திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டை, மகாதேவப்பட்டினம் கிராமங்களில் கரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இரண்டாயிரத்து 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகமாகத் தெரியலாம். இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 83 விழுக்காட்டினர் குணமடைந்து விட்டனர். மேலும், மாவட்டத்தில் இறப்பு விகிதம் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் உள்ளது" என்றார்.
இரண்டாவது தலைநகர் குறித்துப் பேசிய காமராஜ், "அந்தந்த பகுதிகள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இரண்டாவது தலைநகரை உருவாக்குவது குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் நான் கருத்து தெரிவிக்க ஏதும் இல்லை" என்றார்.
மேலும், ரேஷன் கடைகளில் தற்போது கூடுதலாக வழங்கப்படும் ஐந்து கிலோ அரிசியில் மக்களின் தேவைக்கு ஏற்ப ஒரு கிலோ கோதுமை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ”அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள உறுதியான அறிவிப்பே அதற்கான பதில்” என்றார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை அதிமுக கட்சி தலைமை அறிவிக்கும்' - கே.பி. முனுசாமி