திருவாரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராகவும், என்பிஆர், என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தமாட்டோம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் வரக்கூடிய கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஒன்பதாம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களை தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தில் மத்திய அரசு மூக்கை நுழைப்பது கண்டனத்துக்குரியது. கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பித்த நிலையில், சிலர் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வெற்றிபெற வேண்டும். மேலும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு இடம் சொந்தமென வரக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனி சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
2014 முதல் 2018 வரை நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 4,600 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல்களை கைவிடுவது என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது என தெரிகிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய பல நிபந்தனைகள் விவசாயிகளுக்கு விதிக்கப்படுகிறது. ஆகையால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன, எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித நிபந்தனையுமின்றி அரசு நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்றார்.