திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லாசரின் தலைமையில் அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநிலக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் லாசர் கூறுகையில்,
"தமிழ்நாட்டில் 90 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு வந்துள்ளது. மத்திய அரசு தன்னுடைய கடமையைச் செய்யாமல் மாநில அரசின் தலையில் சுமையைச் சுமத்துகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தினை 200 நாள்களாக உயர்த்தி ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இதனை மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி செயல்படுத்த நடவடிக்கை எடுத்து நகர்ப்புறங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உழவர் பாதுகாப்புச் சட்டம் இருந்தது. இதன்மூலம் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இச்சட்டம் பெரும் உதவியாக இருந்துவந்தது. ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது சட்டத்தை நீக்கிவிட்டதால் தற்போது இந்தச் சட்டம் காணாமல் போய்விட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழை, எளிய தொழிலாளர்களுக்கும், உழவர்களுக்கும் பட்டா வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைசெய்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வர்ணாசிரமம் பிராமணிய மேலாதிக்க குணத்தின் அடிப்படையில் நூறு நாள் பணியாளர்கள் இடையே மோதலை உருவாக்குகிறது.
அதன்படி வேலையைத் தனித்தனியாகப் பிரித்து கூலியையும் தனித்தனியாகக் கொடுத்து பிரிவினையைக் கையாளுகிற நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" எனக் கூறினார்.