கிராமசபைக் கூட்டம் ரத்து செய்தது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும்; அதற்குக் கண்டனம் தெரிவித்தும் அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதனை நிறைவேற்றினால் மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்திற்கு உச்ச நீதிமன்ற வழக்கில் எதிர்நிலை உருவாகும் என்ற அச்சத்தால், மத்திய அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு அரசாங்கம் கிராமசபைக் கூட்டங்களை கரோனாவைக் காரணம் காட்டி நடத்துவதற்குத் தடை விதிப்பதாக வெளிவந்துள்ள செய்தி வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது மக்கள் குரல்வளையை நெறிக்கும் செயல். குறிப்பாக, கிராம ஊராட்சிகள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் கிராமங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் காந்தி பிறந்த நாளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கான திட்டங்களை தீட்டுதுவது என்பது சட்டமாகும். இக்கூட்ட தீர்மானங்களை உச்ச நீதிமன்றம்கூட அங்கீகரிக்கும்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் கிராம சபைகள் தமிழ்நாடு முழுமையிலும் அனைத்து ஊராட்சிகளிலும் வேளாண்சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினால், அது மத்திய அரசுக்கு எதிரான வழக்கிற்கு சாதகமாக அமைந்துவிடும்.
இதனாலேயே சட்டத்திற்குப் புறம்பாக கிராம சபைக் கூட்டங்களை தடை செய்வதற்கு மறைமுக நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து சதி செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்மூலம் மத்திய அரசின் தோல்வி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிராம ஊராட்சித் தலைவர்கள் நடத்துகின்ற கிராம சபைக் கூட்டங்களுக்கு அதுவும் காந்தி பிறந்த நாளில் நடைபெறும் கூட்டத்திற்குத் தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கு சட்டப்படி உரிமையில்லை. தன்னாட்சி அதிகாரம் கொண்டுள்ள ஊராட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மறுதலித்தால், ஒவ்வொரு ஊராட்சியிலும் பஞ்சாயத்துராஜ் சட்டப்படி கூட்டம் நடத்த உரிமை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
எனவே, கிராம சபை ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்காலிகமாக ஒத்திப்போகுமே தவிர, நிச்சயம் அடுத்த கிராம சபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊராட்சிகளின் குரலை நெரிக்கும் முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் தாக்கு