திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது.
மாவட்டம் முழுவதும் 935 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தற்போது 430 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 597 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி செயல்பட்டுவருகிறது.
இந்த மாதத்தில் நெல்லின் ஈரப்பதம் என்பது ஒரு பிரச்னை கிடையாது, இருந்தபோதிலும் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேலும் அவர், "கிராம சபைக் கூட்டம் என்பது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வாகும்.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டது சட்டவிரோதமே தவிர; தமிழ்நாடு அரசு கரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அதை ரத்துசெய்தது சட்டவிரோதமானது அல்ல" எனக் கூறினார்.