திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காளியாகுடி, வாலூர், சேத்தூர், பெரும்பண்ணைநல்லூர், கார்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்கு யூரியா, பொட்டாசியம், பூச்சிக்கொல்லி போன்ற உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவிவருவதால் விவசாயிகள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "மேட்டூர் அணை நீரை நம்பி சாகுபடி செய்யலாம் என நம்பி இருந்தோம். ஆனால், ஒரு துளி தண்ணீர் கூட வந்து சேரவில்லை. ஊரடங்கு நேரத்தில் கடன்களை பெற்று போர்வெல் நீரை நம்பி குறுவை சாகுபடியில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது உரத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. யூரியா எந்த கூட்டுறவு சங்கத்திலும் கிடைப்பதில்லை.
தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என பேட்டியளித்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவில்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், அதேபோல் சம்பா சாகுபடிக்கும் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூத்த மகனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்; இளைய மகனின் பைக்கை அடகு வைத்த தந்தை!