நீண்ட காலமாக நடைபெற்றுவந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வழங்கிய மூன்று மாதத்திற்குள் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதேபோல இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்கவும் ஆணையிட்டது.
மத்திய அரசு உருவாக்கிய அறக்கட்டளைக் குழு கோயில் வடிவமைப்புக்கான பணிகளைச் செய்துமுடித்து, தற்போது கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கோயிலின் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இச்சூழலில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியனர் தமிழ்நாட்டின் ஒருசில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும், முத்தலாக் தடை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
நாகை: எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் சபீக் அகமது தலைமையில் மயிலாடுதுறை விஜயா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்: பழைய பேருந்து நிலையம் முன்பு மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி: நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தலைவர் ஜாபர் அலி தலைமையிலான எஸ்டிபிஐ கட்சியினர் ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்து கோஷமிட்டனர்.
திருப்பத்தூர்: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் முகமது சுஹைப் உள்பட 21 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை ராமர் கோயிலுக்கு பால்குடம் எடுத்த பாஜகவினர்!