திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவைச் சேர்ந்தவர் கராத்தே மாரிமுத்து. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட ஏராளமாக வழக்குகள் உள்ளன. சமீபத்தில் திருவாரூர் நகர் பகுதியில் ஆயுதங்களுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று (ஜூலை 8) பிணையில் வெளிவந்த நிலையில், இன்று அதிகாலை திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரவுடி கராத்தே மாரிமுத்து அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். வழக்கம்போல் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்ட நபர்கள் சிலர் இறந்தவரின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள்; சிசிடிவி பதிவில் கையும் களவுமாக சிக்கினர்!