திருவாரூர் : நன்னிலம் அருகேயுள்ள சிறு கிராமத்தில் 108 திவ்ய தலங்களில் 24ஆவது தலமாக உள்ள ஸ்ரீ திவ்யா கிருபாசமுத்திர பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நிலையில், அறநிலையத்துறையின் சார்பில், எந்த ஒரு அரசு உதவிகளும் கோயிலுக்கு சரியாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்களும், பூசாரிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், "இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். தற்போது, சரியான பராமரிப்பு இல்லாததால் கோயில் கோபுரங்களில் செடிகள் முளைத்தும், விரிசல்கள் விழுந்தும் காணப்படுகிறது.
சிலைகள் அலங்கோலமாக தரைத்தளங்கள் முழுவதும் பெயர்ந்தும் காட்சியளிக்கிறது. மேலும், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு அத்துறை சார்பில் எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை. கோயில் குடமுழுக்கு உபயதாரர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டுதான் நடத்தப்பட்டுவருகிறது.
கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பெரும் முதலாளிகள் ஆக்கிரமித்துகொண்டு நிலங்கள் மூலம் வரக்கூடிய வருமானத்தையும் சரிவர வழங்காமல் இருந்துவருகின்றனர்.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கவனத்தில் கொண்டு 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய கிருபாசமுத்திர பெருமாள் கோயிலை செப்பணிட்டு வர்ணங்கள் பூசி புதுப்பித்து கொடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஏன் ஆடி போயி ஆவணி வந்தா?' - சில சிறப்புகளுடன் சித்திரிப்புகளும்...