திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சையில் உள்ள 12 பேரும் ஆரோக்கியமாக உள்ளனர்.
தினந்தோறும் 1,777 பேருக்கு அம்மா உணவகம் மூலம் உணவுகள் வழங்கப்படுகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் இருந்துவந்த நிலையில், தற்போது 1,433 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி நோய் பாதிப்புடைய 14,194 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குரிய மருந்துகள் வழங்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
96.30 விழுக்காடு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியும் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் 8040 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண நிதி இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கேள்விக்குறியில் ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?