திருவாரூர் மாவட்டம் முழுவதும் 531 ரேஷன் கடைகள் இயங்கிவருகின்றன. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3 மணிக்கு தொடங்கி 7 மணி வரை வரையிலும் ரேஷன் கடைகள் இயங்கும்.
இந்நிலையில், ”கரோனா காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் நூறு விழுக்காடு இருப்பு வைக்க வேண்டும்.
குறைந்த பட்ச ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர், உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசம் கையுறை கிருமிநாசினிகள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் ஊழியர்கள் கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.