சேலம்: சேலம் கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குகான வரி குறித்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய நெசவாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், “சேலம் மாநகர பகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி இயந்திரங்களை நிறுவி ஜவுளி தொழில் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டிச.21 இல் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு - பாமக அறிவிப்பு..!
கரோனா கால கட்டத்தில் சேலம் ஜவுளி தொழில் பெரும்பாலும் முடங்கி போனது. அதனைத் தொடர்ந்து, வட இந்திய நகரமான சூரத்தில் இருந்து அதிகளவில் ஜவுளிகள் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக உள்ளூர் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் 60 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினர், வீடுகளில் இயங்கும் தறிக்கூடங்களுக்கு 200 சதவீதம் வரை வணிகவரி விதித்து வருவதால் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து, தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக சேலம் கருங்கல்பட்டி பகுதியில் அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வணிக வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றினர். இது தொடர்பாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்