திருவாரூர்: கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் உயிர் பயத்தினால் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
இந்த நேரத்திலும் தூய்மை பணியாளர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பணியினை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு கவுரவித்தது.தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி கவுரவித்துவருகிறது.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் நான்கு தூய்மை பணியாளர்கள் மட்டுமே நியமிக்கபட்டுள்ளனர். இதனால் அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் உரிய நேரத்தில் சென்று தூய்மை பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
![தூய்மை பணியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-02-cleaning-staff-increse-vis-script-byte-tn10029_12062021130732_1206f_1623483452_220.jpg)
இந்த நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஊராட்சிக்கு கூடுதலாக 10 தூய்மை பணியாளர்களை நியமித்து ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கும் இரண்டு நபர்கள் என பிரித்து அனுப்பினால் அவர்களின் பணிச்சுமை குறையும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசு உரிய பரிசீலனை செய்து ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் மாத ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடிகாரங்களை காதலிக்கும் ஆசிரியர்!