திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘தமிழகம் முழுவதும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தேவையான அளவு பெய்ததால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. சம்பா மற்றும் மானாவாரி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பயிர்களும் வளமாக வளர்ந்து வரும் நிலையில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15ஆம் தேதிக்குள் மேலுரமாக யூரியா உரமிட உகந்த காலமாகும்.
தற்போது யூரியா தட்டுப்பாட்டால் உரிய காலத்தில் உரமிட முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். இதனால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 முதல் தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு மழை கை கெடுத்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ள விவசாயிகளுக்கு, யூரியா உரமிட முடியாததால் மகசூல் இழப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு மானியம் வழங்குவதில் கொண்டு வந்துள்ள நடைமுறை சிக்கலால் யூரியா தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என இரண்டு மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல் இடைத்தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால் செயற்கையாக உரத் தட்டுபாட்டை தமிழக அரசே உருவாக்கிவிட்டது. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு யூரியா தட்டுப்பாட்டை போக்கி தமிழக விவசாயிகளை பாதுகாத்திட வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு - கொந்தளிக்கும் பி.ஆர்.பாண்டியன்