இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் கருத்து கேட்காமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதலின்றி கிணறு அமைக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களுக்கு அனுமதியளித்து மத்திய அரசு கடந்த ஜனவரியில் அவசர அறிவிப்பாணையை வெளியிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தால் தொடரப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் தலைமை நீதிபதி பாப்டே உத்தரவை ஏற்று நாளை 05.03.2020ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு வரும் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மன்னார்குடி தேரடித் திடலில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் அமைச்சர்கள் இரா. காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், பழ.நெடுமாறன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருநாவுக்கரசர், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், இராமலிங்கம், காமகோடி மற்றும் காவிரி டெல்டா பகுதி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, துரை சந்திரசேகரன், பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, உ. மதிவாணன், சாக்கோட்டை அன்பழகன், ப.ஆடலரசன் பங்கேற்க உள்ளனர். மேலும் வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், நீரியல் ஆய்வாளர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
நிறைவு மாநாட்டில் திரைப்பட கலைஞர்கள் கார்த்தி, கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் சரவணன், சக்தி ஃபிலிம்ஸ் சக்திவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். கருத்தரங்குகள், இயந்திரக் கண்காட்சி, வேளாண் செயல் விளக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. மேலும் கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம் கிராமிய ஆடல் பாடல்கள் இடம் பெற உள்ளன. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் பங்கேற்க வேண்டுகிறேன்’ என்றார்.