கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆகஸ்ட் 16) தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஊரடங்கை மீறி, சாலையில் சுற்றியதாகக் கூறி, ஆயிரத்து 251 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கண்காணிப்பாளர் துரை தெரிவித்தார்.
மேலும் பொது ஊரடங்கன்று அவசர தேவையைத் தவிர, தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரை எச்சரித்துள்ளார்.