திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் கிராமத்தின் வழியாக பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நான்து கி.மீ., சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், அடிக்கடி செல்லும் வாகனங்களால் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த சாலையில் பாசன வாய்க்கால்களை கடக்கும் இடங்களில் 18 மதகுகள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது, மதகுகள் கட்டி முடித்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10) இந்த மதகை டிராக்டர் ஒன்று கடக்கும் போது இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை பணி நடந்து வருகிறது. சாலையில் கட்டப்படும் மதகுகள் அனைத்தும் தரமற்ற முறையிலும் இரவு நேரத்தில் சிமெண்டுடன் சவுடு மணல் கலந்து கட்டிவிட்டு செல்வதால் இந்த மதகுகள் அனைத்தும் அடிக்கடி உடைந்து விடுகின்றன.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் யாரும் இந்த பணியை பார்வையிட வருவதில்லை. அதனால்தான் தரமற்ற மதகுகளை ஒப்பந்ததாரர்கள் கட்டி விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்த பின்னரே, மதகுகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும்" என்றனர்.