தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் அதிமுக கூட்டணியைவிட திமுக கூட்டணி அதிகளவில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பாக ராஜமாணிக்கம் என்பவர் போட்டியிட்டார். ஆனால், அதே பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த நபரும் போட்டியிட்டதால் தேமுதிகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் தனித்து விடப்பட்டார்.
கூட்டணிக் குழப்பம் திமுகவிற்கு சாதகமானதால் திமுக பெருந்தரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைத் தட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், விரக்தியடைந்த தேமுதிக வேட்பாளர் ராஜமாணிக்கம், கூட்டணி துரோகம், சாதி வெறி, கட்சி வெறி, பண மோகம் இவைகளைத் தாண்டி தனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பெருந்தரக்குடி ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு!