திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகள் போன்றவற்றின் வாயிற்பகுதிகளில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இது, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இங்கு இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து நாய்கள் குறைப்பதும், வாகனங்களில் வருவோரை விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு மத்தியில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இந்த நாய்களின் பயமும் சேர்த்து தொற்றிக்கொள்கிறது.
மேலும், மருத்துவமனையைச் சுற்றி கழிவு நீர் தேங்கியிருப்பதாலும், அசுத்தமாக இருப்பதாலும் நோய்த்தொற்று பரவக் கூடிய அவல நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக பிரசவ வார்டிற்கு அருகில் சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்த சுகாதாரச் சீர்கேட்டினால் எளிதாக தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
இதனால் நோயாளிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நாய்களைப் பிடித்தும், கழிவுநீரை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.