ஹைட்ரோகார்பன் திட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமலேயே புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் ஓன்ஜிசி நிறுவனத்தின் புதிய எண்ணெய் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று, புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் எண்ணெய் துரப்பண ஆழ்குழாய் அமைக்கும் இடங்களின் முன்பு முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.