திருவாரூர்: காரியமங்கலத்தில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு வெளியேறி கிராம மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓஎன்ஜிசி சார்பில், பல்வேறு இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைத்து, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும், மீத்தேன் திட்டம் தொடர்பான அச்சம் ஏற்பட்டதில் இருந்து பொதுமக்கள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச ரிங்பால் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கம்.. மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்!
மேலும், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டு உற்பத்தி நின்ற நிலையில் உள்ள எண்ணெய் கிணறுகள், ஓஎன்ஜிசி நிறுவனத்தாரால் பல மாதங்களாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, திருவாரூர் அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தில் இரண்டு கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய்களை ஓஎன்ஜிசி நிறுவனம் எடுத்து வந்தது.
அதனைத்தொடர்ந்து, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு உற்பத்தி நின்ற நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இரண்டு கிணறுகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூடப்பட்ட கச்சா எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறி வருகின்றது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், இது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் இதுவரை சரிசெய்யும் பணிகளை தொடங்கவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் வலம் வரும் காட்டு யானைகள்.. கடைகள் சூறையாடல்! அச்சத்தில் பொதுமக்கள்! சுற்றுலா பயணிகளுக்கு தடை!