திருவாரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழ்தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மிகவும் பிரசித்திப் பெற்றதும், தொன்மையானதுமான தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்தக் குடமுழுக்கு விழாவினை தமிழ் மரபுப்படி தமிழ்மொழி வழியில் நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கும், அறநிலையத் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளோம். அது குறித்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
எனவே, வருகின்ற 22ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்தக்கோரி வேண்டுகோள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சட்டவல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியைப் பரப்புவதற்கும், இதுவரை எந்த அளவு இந்தி பரவியுள்ளது என்பது குறித்து ஆய்வுசெய்ய இந்திய அலுவல் மொழி ஆய்வுக்குழு தமிழ்நாடு வந்துள்ளது.
இந்த ஆய்வுக்குழுவானது தமிழர் திருநாளான பொங்கல் விடுமுறையில் வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்தக் குழு ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஊழியர்களிடம் இந்தியைத் திணிக்கும் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம்: பெ.மணியரசன் காட்டமான அறிக்கை!