திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தின் சாலையோரமாக சுமார் 50க்கும் மேற்பட்ட கூடைப் பின்னும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் பாரம்பரியத் தொழிலான மூங்கில் கூடைப் பின்னுதல், மூங்கில் மரத்தைக் கொண்டு ஏணி செய்தல், வீடுகளுக்கு கதவு அமைத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த மூங்கில் கூடைகளை கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்.
ஆனால், தற்போது நெகிழி கூடைகளின் வருகையால் அந்த நிலை முழுவதுமாக மாறியுள்ளது. மக்கள் அதிகமாக நெகிழி கூடைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கூடைப் பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த மூங்கில் கூடைகளின் உதவியோடுதான் மீனவர்கள், மீன்களை ஐஸ் கொண்டு பாதுகாத்து விற்பனை செய்து வந்தனர். அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் உணவு சமைத்து வடிப்பதற்கும் இந்த மூங்கில் கூடைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மக்கள் அலுமினியக் கூடைகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக, கூடைப் பின்னும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு திட்டங்களும், கடன் உதவிகளும் கிடைப்பதில்லை. இதனால், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கூட கிடைப்பதில்லை எனத் தெரியவருகிறது.
எனவே தமிழ்நாடு அரசு கூடைப் பின்னும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என கூடைப் பின்னும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெகிழித் தடை: விதிவிலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை