திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களின் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சம்பா சாகுபடி தொடங்கிய நாள் முதல் தண்ணீர் பிரச்னை, உர தட்டுபாடு, பயிர்களில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல், இளைசுருட்டல், புளு தாக்குதல் என பல்வேறு பிரச்னைகளுக்கிடையே விளையும் பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை இயந்திரங்கள் கொண்டு அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இயந்திர தட்டுப்பாடு காரணமாக இன்றளவும் அறுவடை செய்ய முடியாமல் நெற்பயிர்கள் வீணாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 மூட்டைகள் அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 6 முதல் 8 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியில் நெல்லை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் நெல்லை இப்போது கொள்முதல் செய்ய முடியாது என காலம் கடத்துவதாகவும் கூறுகின்றனர். ஆனால் வெளி மாநில நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இது குறித்து ஆய்வு செய்வதாக வாய்வார்த்தையாக கூறிவருகின்றனரே தவிர நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கக்கூடிய முறைகேடுகள் மீது நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் பயிர் காப்பீட்டு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்தின் சுகாதாரத்துறையோடு தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்!