திருவாரூரில், 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து மிதமுள்ள 20 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்த நெற்பயிர்கள் முழுவதும் ஈரப்பதம் அதிகம் காணப்படுவதால் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றாலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
இதனால் 17 சதவீதமாக இருந்து வரும் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு (இந்திய நுகர்பொருள் வாணிபக் கழகம் ) தொடர்ந்து கடிதம் எழுதி கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்ற மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த பின்னர் ஈரப்பதம் குறித்து முடிவு அறிவிக்கப்பட்டும் என கூறினர். இதையடுத்து, மத்திய ஆய்வுக்கமிட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு பணியைத் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறும்போது, குறுவை சாகுபடி பணிகள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. குறுவை சாகுபடியானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் விவசாயிகளின் பாதிப்பை கூறி ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தால் விவசாயிகள் பலன் பெற்றிருப்பார்கள்.
ஆனால் தற்போது குறுவை சாகுபடி பணிகள் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தற்போது ஆய்வுக் குழுவை அனுப்பி ஆய்வு செய்வதில் எந்த ஒரு பலனும் விவசாயிகளுக்கு கிடைக்க போவதில்லை. மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்த பிறகு அடுத்த மாதங்களில் தான் ஆய்வறிக்கையின் முடிவு வெளியிடப்படும். அதற்குள் மீதமுள்ள 20 சதவீத சாகுபடி பணிகள் முடிவடைந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பலன் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். மத்திய அரசு, அரசியல் நோக்கோடு செயல்படுகிறது. இதற்கு மாநில அரசும் துணை போகிறது. மத்திய அரசின் குழுவிற்கு வீண் செலவுகள் தான் அதிகம். இது விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கப் போவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:
குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில் இவ்வளவு தாமதமா? தடையா? - சிறப்புக்கட்டுரை