திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றுவருகிறது. அண்மையில், பெய்த கனமழையால், பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, பல்வேறு இடங்களில் நெல் பழம் நோய் தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய விவசாயி அழகர்ராஜ், "இந்தாண்டு மேட்டூர் அணை தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்பட்டதால், சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன. தற்போது, ஐந்து நாள்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நெற்பயிர்கள் முழுவதும் நெல் பழம் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். இனிவரும் காலங்களில் விதை நேர்த்தி செய்து விதை மூட்டைகள் வேளாண் துறை அலுவலர்கள் வழங்க வேண்டும்.
மேலும், நோய்த் தாக்குதல் குறித்து கிராமங்களுக்குச் சென்று வேளாண் துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நெல் பழம் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: சசிகலா சொந்த ஊரில் ஆரவாரம்.. விரைவில் ஆட்சியில் அமர்வார் என தொண்டர்கள் நம்பிக்கை!