திருவாரூர் அருகே உள்ள கூத்தங்குடி, அண்ணுகுடி, கல்யாணமஹாதேவி, பெருங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் விளை நிலங்களான சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இன்று வரை தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது. மேலும் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பெய்யும் மழை நீரால் ஓரளவு பயிர்கள் வளரத் தொடங்கிய நிலையில், தற்போது மழையும் சரிவர பெய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெற்பயிர்கள் முழுவதும் வாடி கருகுவதோடு, விளை நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே இந்த நெற்பயிர்களை காக்க முடியும் என்று புலம்புகின்றனர்.
மேலும், இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் பார்வையிட்டு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழையால் சாயும் நிலையில் மரம்; பொதுமக்கள் அச்சம்!