டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளுக்கு டெல்டா விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று மீண்டும் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிக்க வந்தனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மக்களை நேரடியாக வந்து சந்தித்தார். அப்போது, “ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இரவுநேரங்களில் ராட்சத இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் அதிக இரைச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் இரவு தூக்கமின்றி அவதி படுகின்றனர்.
மேலும் விவசாய நிலங்களில் சாலைகளை அமைத்துள்ளனர். இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி சாக்கடையாக உருவெடுத்து கொசுக்கள் உற்பத்தியாகுகிறது. மர்ம காய்ச்சலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
மக்களின் குறைகளை கவனமாக கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆனந்த், அப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க: பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் - நீதிபதி அதிரடி உத்தரவு!