டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கிணறுகள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
விளைநிலத்தில் புதைக்கப்படும் இந்த எண்ணெய் குழாய்க்கு தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மூலங்குடி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா நெல் பயிரிடப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து உளுந்து விதைக்கப்பட்டு முளைத்து வரும் தருவாயில், அவரது விளைநிலத்தின் அடிப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வயல் முழுவதும் கசிந்து விளை நிலத்தை நாசப்படுத்தியுள்ளது.
இதைக்கண்ட நிலத்தின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓஎன்ஜிசி அலுவலர்கள் பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியினையும் மேற்கொண்டுவருகின்றனர்.
கச்சா எண்ணெய் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் விளைநிலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் இதனால் தனது வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'எங்கேயும் காதல்' - சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற தமிழரின் காதல்