திருவாரூர்: வடுவூர் அருகேவுள்ள மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (56). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு காமராஜ், நாகராஜ் என்ற இருமகன்கள் உள்ள நிலையில் ஒருவர் திருவாரூரிலும், மற்றொருவர் மன்னார்குடியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேலநெம்மேலி கிராமத்தில் தனியாக வசித்துவந்த கிருஷ்ணவேணியினை கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு, கிருஷ்ணவேணி வீட்டில் நுழைந்த அந்த கும்பல் அவரை தாக்கியதோடு, கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த தங்க நகை என மொத்தம் 26 சவரன் நகைகளை கொள்ளையடித்ததோடு, கிருஷ்ணவேணியையும் வாகனத்தில் வைத்து கடத்திச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணவேணியின் மகன்கள் தனது அம்மாவிற்கு தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. மேலும், கிருஷ்ணவேணி வெகுநேரமாக வீட்டை விட்டு வெளியில் வராமல், வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் வடுவூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கிருஷ்ணவேணி வீட்டை திறந்தபோது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு இருப்பதும், கிருஷ்ணவேணி கடத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணவேணியின் மகன்கள் தனது தாயாரிடம் இருந்த 26 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்தும், தாயார் கடத்தப்பட்டிருப்பது குறித்தும் வடுவூர் காவல் நிலையத்திற்கு முறையாக புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கண்டறியும் வகையில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்