திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள பின்லே துவக்கப்பள்ளி 1847ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. கல்வியில் சிறந்த மாணவர்களை இந்த பள்ளி உருவாக்கியுள்ளது. கடந்த கஜா புயலின் போது இந்த பள்ளி கட்டடத்தின் மேற்கூரை மட்டும் பழுதடைந்ததால், மாணவர்கள் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. பள்ளி கட்டடத்தை பார்வையிட திருச்சி, தஞ்சாவூர் திருமண்டல பேராயர் மன்னார்குடிக்கு வந்தார். அப்போது, இப்பள்ளி கட்டடத்தை இடிக்காமல் புதிய புனரமைப்பு செய்து பின்லே மேல்நிலைப்பள்ளியாக துவங்க வேண்டும் அல்லது ஆங்கில வழிக் கல்வி துவங்க வேண்டும் என பேராயரிடம் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தினர்.
![old students protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-02-school-demolition-old-student-opposition-vis-script-tn10029_07112020160045_0711f_1604745045_1081.jpg)
இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது, "பின்லே பள்ளி 170 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டு பல தலைமுறைகளை உருவாக்கிய இப்பள்ளியை இடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் தற்போது வரை எந்தவிதமான விரிசல்களும் இல்லை. கஜா புயலின் போது மேற்கூரைகள் மட்டுமே சரிந்துள்ளது. இப்படி பாரம்பரியமான பள்ளியை இடிப்பது பழைய மாணவர்களிடையே மிகுந்த வேதனை அளிக்கிறது" என்றனர்.
![old students protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-02-school-demolition-old-student-opposition-vis-script-tn10029_07112020160045_0711f_1604745045_257.jpg)