திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குமாரமங்கலம் என்னும் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 70 வருடங்களாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அன்றாட தேவையான குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள புதுச்சேரிக்கு உட்பட்ட நெடுங்காடு பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், இந்தத் தண்ணீரானது தங்களின் தேவைக்கு ஏற்ப கிடைக்காததால் இரண்டு குடம் தண்ணீரை மட்டிமே வைத்து குடும்பத்தினர் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் பள்ளமான பகுதி என்பதாலும், சாலை வசதி சரிவர இல்லாததாலும் மழைக்காலங்களில் குடிசைப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துவிடுவதாலும், பள்ளி மாணவர்களும், பெண்களும் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அடிப்படை வசதி இல்லாமல் திணறி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு திட்டங்களும் கூட எங்களை வந்தடைவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அலட்சியமாக பதில் கூறி வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவர் கைது