திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் நோக்கில் நெல் ஜெயராமனால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேசிய நெல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவின் போது, விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய நெல் ரகங்களை கொடுக்கப்படும். தொடர்ந்து, மறுவருடம் நெல்லை பெற்ற விவசாயிகள் நான்கு கிலோ நெல்லை திரும்ப தர வேண்டும்.
இந்த திருவிழாவில் ஏராளமான விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள், இளைஞர்கள் கலந்து கொள்வர். நெல் ஜெயராமன் மறைவை அடுத்து இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் பேராசிரியர் துரைசிங்கம் தலைமையில் திருவாரூர் தாய்மண் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைசிங்கம், " 13ஆவது ஆண்டுக்கான தேசிய நெல் திருவிழாவானது வருகின்ற ஜூன் 8, 9 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. இந்த நெல் திருவிழாவின்போது மறைந்த நெல் ஜெயராமனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்படும். அரசு அலுவவர்கள், விவசாயிகள் பங்கேற்கும் இத்திருவிழாவில் 4,500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.