நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய குடியிருப்பு உள்ளது. இவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேக விழாக்களில் தெருவோரங்களில் கடைகள் அமைத்து அன்றாட பிழைப்பு நடத்திவருகின்றனர். அன்றாட பிழைப்புக்கே வழியில்லாத நிலையில் இவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை.
இதனையடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு இவர்களுடைய குடியிருப்பிலேயே உண்டு உறைவிட பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 10ஆம் வகுப்புத் தேர்வில் இங்கு பயின்ற 8 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து உண்டு உறைவிடப் பள்ளியில் ஒன்று சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாலை நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.