திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள திருக்கொட்டாரம் வழியாக செல்லும் நாட்டாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பி சேனல் வாய்க்கால் பாசனத்தை நம்பி திருக்கொட்டாரம், மணலி, பருத்திகுடி உள்ளிட்ட கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
திருக்கொட்டாரம் பி சேனல் வாய்க்காலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினரால் கட்டப்பட்ட தடுப்பணையானது தற்போது புதர்கள் மண்டியும், ரெகுலேட்டர்களை மேலே தூக்க முடியாத நிலையில் இருப்பதாலும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன நீர் பெறமுடியாமல் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் பேசுகையில், " நாட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் பி சேனல் வாய்க்கால் பாசனத்தை நம்பி எங்கள் பகுதியில் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு பி சேனலில் கட்டப்பட்ட தடுப்பணை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க உள்ளது. தண்ணீர் அதிகளவில் வாய்க்காலில் வரும்நேரத்தில் தண்ணீரை வடிய வைக்க முடியாத சூழல் உருவாகும். இதனால், சாகுபடி செய்யப்பட்ட 700 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் விவசாயிகள் நலனை கவனத்தில் கொண்டு பருவமழை தொடங்கும் முன்பே தடுப்பணைகளை சரிசெய்து கொடுக்கவேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அலட்சியம் காட்டாமல், உடனே இந்த தடுப்பணைகளை சரிசெய்தும் 10ஆண்டுகளாக தூர்வாராமல் இருக்கும் பி சேனல் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு அரசியல் நோக்கோடு செயல்படுகிறது - விவசாயிகள் குற்றச்சாட்டு