திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள திருக்கொட்டாரம், மணலி, பழையாறு உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நேற்றிரவு (ஜூலை 28) நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வயல் முழுவதும் தண்ணீர் சேர்ந்து நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் வேதனையடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, இந்த கரோனா ஊரடங்கு நேரத்திலும் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கடன் பெற்று போர்வெல் கொண்டு குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வந்தோம். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் வயலிலேயே சாய்ந்துவிட்டன.
பருத்தியில் தான் லாபம் கிடைக்கவில்லை என்று குறுவை சாகுபடியில் செய்தோம். ஆனால், நேற்று பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநரை யாரும் நெருங்க வேண்டாம் - காரணம் இதுதான்!