திருவாரூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் பரப்பளவில் குறுவைச் சாகுபடி நடைபெற்றுள்ளது. அந்தப் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்குவருகின்றன.
இதனிடையே, திருவாரூரில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவாரூர் அருகே புளிச்சகாடி என்ற ஊரில் செயல்பட்டுவரும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் உரிய நேரத்தில் சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படாமல், கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடந்துள்ளன.
இதனால் மழையால் அந்த நெல் மூட்டைகள் நனைந்து தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி விவசாயிகள் சிலர் விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகளூம் சேதமடைந்துள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களில் அன்றாடம் கொள்முதல் செய்யப்படுகின்ற மூட்டைகளைச் சேமிப்பு கிடங்கு எடுத்துச் சென்று உரிய முறையில் பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.