திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பூக்கொல்லை தெருவைச் சேர்ந்த தம்பதியினர் மேகலாதேவி - ஜெயபிரகாஷ். இருவரும் துணி வியாபாரம் செய்துவந்தாகக் கூறப்படுகிறது. மேகலா தேவி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மன்னார்குடி பகுதிகளில் உள்ள நெடுவாக்கோட்டை, பரவாக்கோட்டை, மேலவாசல், அஷேசம், பூக்கொல்லை ரோடு, கீழப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேகலா தேவி வீடுவீடாக துணி வியாபரம் செய்தபோது பல பெண்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் நெருங்கி பழகிய பெண்களிடம், 10 மாதங்களுக்கு முன்பு தானும் தனது கணவரும் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், என்னிடம் நீங்கள் பணம் கொடுத்தால் அதற்கு அதிகளவில் வட்டி கிடைக்கும் எனவும், மாதா மாதம் குறித்த நாளில் கொடுக்கும் பணத்திற்கு உரிய வட்டி கொடுக்கப்படும் என பேசி அப்பெண்களுக்கு ஆசை காட்டியுள்ளார்.
ஒருவரிடம் பணம் பெற்ற செய்தி அடுத்த பெண்களுக்கு தெரியாதவாறு மேகலா தேவி பார்த்துக் கொண்டுள்ளார். இதேபோன்று 21 பெண்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டும் வட்டி பணம் கொடுத்த மேகலாதேவி, பலருக்கு பல மாதங்களாக வட்டி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பலர், வட்டியோடு சேர்த்து தாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கொடுக்குமாறு மேகலாதேவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
நெருக்கடிக்கு பயந்து மேகலாதேவி தனது கணவருடன் தலைமறைவாகிவிட்டார். இதனையறிந்த பணம் கொடுத்த பெண்கள் மேகலாதேவி வீட்டிற்குச் சென்று அங்கிருந்த அவரின் மாமனார் ராஜகோபால் என்பவரிடம் மேகலாதேவி எங்கு சென்றார்? என கேட்டதற்கு, தனக்கும் மேகலாவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்களில் சிலர், மன்னார்குடியில் உள்ள மேகலாதேவி, வீட்டின் கதவை உடைத்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மேகலா தேவியின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மேகலா தேவியின் மாமனாருடன் பேசினர். பின்னர், காவல்துறையினர் முற்றுகையிட்ட பெண்களை சமரசம் செய்து திருப்பி அனுப்பினர்.