இதுகுறித்து, திருவாரூர் பரப்புரையில் மு.க. ஸ்டாலின் கூறுகையில், "வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போகும் திருவாரூர் தொகுதி பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதி டி.ஆர்.பி.ராஜா, வேதாரண்யம் தொகுதி வேதரத்தினம், நன்னிலம் தொகுதி ஜோதிராமன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், நம்முடைய கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்துக்கு திருத்துறைப்பூண்டி தொகுதியில் கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
ஜெயலலிதா உயிரிழந்ததற்கு காரணம் கலைஞரும், மு.க. ஸ்டாலினும்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 4 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், மு.க. ஸ்டாலின்தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
நான் காரணம் என்றால் வழக்கு போடுங்கள் சந்திக்க தயார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு உண்மை வெளிப்படும், முறையான விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் உயிரிழப்பு காரணம் குறித்து மக்களுக்கு அடையாளம் காட்டப்படும். அதையடுத்து நேற்று அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. திமுக சொன்னதையே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
திமுக 234 இடங்களிலும் மாபெரும் வெற்றியை அடையப் போகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 100 நாள்களில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கான பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும். அதேபோல அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியை தழுவி 'வாஷ் அவுட்' ஆகப்போவது உறுதி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’234 அல்ல; எடப்பாடியில் வென்று காட்டுங்கள்’ - ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!