திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாணிக்கமங்கலத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள், தூர்வாரும் பணிகள் உள்ளிட்டப் பணிகள் விரைவாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
அப்பணிகள் எதிர்பார்த்தபடி விரைவாக நடைபெற்று வருகின்றன. மேட்டூரில் நீர் திறந்துவிடுவதற்குள் தூர்வாரும் பணிகள் விரைவாக முடிக்கப்படும்” என்றார்.
மேலும், வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் கிராம விவசாயிகளின் வேண்டுகோளின்படி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மட்டும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால், ஓடைகள் ஆகியவற்றை சுமார் 27 ஆயிரத்து 311 வேலையாள்களைக் கொண்டு 623 கி.மீ. நீள அளவு கொண்ட வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.