திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொல்லுமாங்குடி அருகே சிறுபுலியூரில் உள்ள கிருபாசமுத்திர பெருமாளை வழிபட்டு பின், மேளதாளங்கள் முழங்க தனது முதல் தேர்தல் பரப்புரை தொடங்கினார்.
அப்போது, வாக்களரிடையே பேசிய அவர், "நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகின்றேன். அதிமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் என்னைத் தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
எனக்கு மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் கரோனா நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற அச்சத்தில் இருந்தபோது உங்களுடைய பிரார்த்தனையும், வேண்டுதலும்தான் எனக்கு மறுபிறவி அளித்து இங்கே வந்து நிற்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு நன்றி செலுத்தும் வகையில் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக பணியாற்றுவேன்" எனப் பேசியுள்ளார்.
இதேபோல், திருவாரூர் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிரியும் என்ற நிலையில் இருந்த நான், மருத்துவர்களின் முயற்சியாலும், எனது தொகுதி மக்கள் செய்த கூட்டுப் பிரார்த்தனையாலும் மீண்டும் உயிர் பெற்றுள்ளேன். என்னுடையத் தொகுதி மக்களுக்காக என் வாழ்நாள் முழுவதும் நான் கடுமையாக உழைப்பேன்" என்று இங்கும் உருக்கமாகப் பேசினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா இறப்பிற்கு திமுகதான் காரணமா? - உதயநிதி கேள்வி