திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், அரித்துவார்மங்கலம் பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து சுமார் 78.55 விழுக்காடினர் மீண்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை கரோனாவிலிருந்து 86.48 விழுக்காடினர் மீண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எஸ்.வி சேகர் ஏற்கனவே அதிமுக வேட்பாளராக இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதும் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்த போதும் அதிமுக கொடி தான் அவரது வாகனத்தில் இருந்தது. அவரின் செயல் மிகவும் மோசமானது. அதிமுகவினரும் தமிழ்நாடு மக்களும் எஸ்.வி சேகரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், "எஸ்.வி சேகரின் கட்சிக்காரர்களே அவரை பாஜக என கூறுவதில்லை. இந்நிலையில் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு, 'நானும் ரவுடிதான்' எனக் கூறுவது போல எஸ்.வி சேகர் கூறி வருகிறார். பாஜகவுக்கு எஸ்.வி சேகர் ஒரு கரும்புள்ளி. மேலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருந்தால் சம்பளத்தைத் திருப்பியளிக்க தயாரா?'