திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கபசுரக் குடிநீர், முகக்கவசம், மாத்திரைகள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 73 விழுக்காடு பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்துள்ளனர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதால்தான். எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். தொற்று பரவ நாம் காரணமாக அமைகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் விரைவில் முகக்கவசம் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா உறுதி!