திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் பாண்டவையாற்றிலிருந்து திருநெய்பேர் பாசன வாய்க்கால் வரை, 7 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், " திருவாரூர் மாவட்டத்தில் பகுப்பாய்வு அலுவலர்கள் அனைத்து வாய்க்கால்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தண்ணீர் வந்தாலும் பாதிக்காத வகையில் குடிமராத்துத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், அத்தோடு ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகளில் 48 பணிகளில் 30 பணிகள் எடுக்கப்பட்டு, அவை முழுமையாக முடிவடைய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் கிளை வாய்க்கால்கள்,பாசன வாய்கால்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் ஓரிரு தினங்களில் திருவாரூர் வந்தடையும். கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் வகையில் தூர்வாரும் பணிகள் பாதிப்பு இல்லாமல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.