திருவாரூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்காக திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறம் உழவர் சந்தை அமைத்து கொடுக்கப்பட்டது. இச்சந்தையில் தரைக்கடை வியாபாரிகள் காய்கறி, கடைகள், மீன் கடைகள், கருவாட்டு சந்தைகள், பூக்கடைகள் என அனைத்து கடைகளும் இயங்கிவந்தன.
இந்நிலையில் உழவர் சந்தையில் போதுமான இடவசதி இல்லாததாலும் அதன் மேற்கூரைகள் பெயர்ந்தும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்ததால் உழவர் சந்தையை தற்காலிகமாக நகர் பகுதியில் சாலையோரத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளை மாற்றி அமைத்தனர்.
இதனையடுத்து 10- வருடங்களுக்கு மேலாக உழவர் சந்தை பயன்பாட்டற்று கிடப்பதால் தரைக்கடை வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும்ன் போக்குவரத்து இடையூறால் அதிக நெரிசல் உண்டாகி பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
மீண்டும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் தரைக்கடை வியாபாரிகள் உழவர் சந்தைக்கு சென்றுவிடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுவிடும். எனவே இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி விற்பனை: ஒரேநாளில் இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனை!