வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் டெல்டா மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் அலுவலர்கள் கொள்முதல் செய்வார்களா? என விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இப்பகுதியில் விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதற்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து டாரஸ் லாரி மூலம் 600 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொள்முதல் செய்ய வந்த லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் துணையோடு வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்ய மன்னார்குடி பகுதிக்கு வருகிறது எனவும் எங்கள் பகுதியில் விளைந்த நெல்லை பல்வேறு காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் அளிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முத்தூட் நிதி நிறுவன கொள்ளையர்கள் ஹைதராபாத்தில் பிடிபட்டனர்